நம் குருதியை உறிஞ்சும் அரசு
வரி செலுத்தாமல் வாழும் முறை
நாம் சம்பாரிக்கும் பணத்தில் வருடத்திற்கு இவ்வளவு என்று வருமானவரி செலுத்துகின்றோம். அதுமட்டுமன்றி எல்லாவகையான பொருட்களையும் சந்தையில் தான் வாங்குகிறோம். அதுக்கும் மறைமுகமாக அந்த வரி இந்த வரி எனச் செலுத்தி தான் வாங்குகிறோம். இப்படி நம்ம கிட்ட இருந்து வாங்கும் வரிப் பணத்தை வைத்து தான் அரசு கஜானா நிரம்புகிறது. ஆனால் அந்த தொகையை இதுவரை எந்தவித முக்கியமான திட்டத்திற்கும் செலவு செய்யாமல் தேவையில்லாத கையாலாகாத திட்டத்திற்கு செலவு செய்கிறது. ஏன் என்று குரல் கொடுத்தால் அதற்கான விளக்கமும் கிடைத்தபாடில்லை. அரசே நாம் தான் ஆனால் நமக்கே பதில் தருவதில்லை.
சில நாடுகள் வரியே வாங்காமல் தன் நாட்டு மக்களுக்கு நல்ல பயனுள்ள திட்டங்களை தருகின்றனர். ஆனால் நம் நாட்டில் அனைத்தையும் புடுங்கிக் கொண்டு எந்த நல்ல திட்டமும் இல்லை. நமது உழைப்பை நமது பணத்தை நமது குருதியை உறிஞ்சுகின்றன. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன கல்வி மற்றும் மருத்துவம் தனியாரிடம் உள்ளது. இயற்கை விவசாயம் அழிவு, கார்ப்ரேட் நிறுவனங்களின் வருகை, ஏனைய இயற்கை வளங்கள் சுரண்டல் என அனைத்தும் அழிந்தன.
வருங்கால சந்ததியினர்க்கு ஒன்றுமே கிடைக்காத சூழலை தான் உருவாக்கி கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் போது நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது?
வரி செலுத்தாமல் இருக்க வழி உள்ளது
நம் முன்னோர்கள் வாழ்வியல் படி நாம் அனைவரும் தற்சார்புக்கு மாறினால் நாம் எந்த சந்தையிலும் எதுவும் வாங்க வேண்டாம். யாருக்கும் வரி செலுத்த வேண்டாம்.
என்னிடம் இருந்து அரசுக்கு எந்த வகையிலும் பணம் செல்லாத போது நான் ஏன் இந்த அரசு நடவடிக்கைகள் பற்றி கவலை பட வேண்டும்?
இந்தியாவில் மொத்தம் 70% கிராமங்கள் தான் உள்ளது. அனைத்தும் முன்பு போல் தற்சார்புக்கு மாறினால் உண்மையான கேஸ்லஸ் எகனாமிக்கு (cashless economy) இந்தியா மாறிவிடும் அதுதான் பண்டமாற்று முறை.
இயற்கை வளங்கள் காக்கப்படும், அனைவருக்கும் எல்லாம் கிடைக்கும். நஞ்சில்லா உணவு, இயற்கை விவசாயம், மரபு வழி கல்வி, மருத்துவம் என்று எல்லாம் சீராக்கும். அனைத்து வளங்களும் நம்முடன் இருக்கும். தற்சார்பை நோக்கி பயணிப்போம்.
மு.சந்தோஃச் குமார்