கோடைக் காலத்தில் நிலங்களைப் பாருங்கள். வறண்டு வெடிப்பு கண்டு கிடக்கிறது. வெடிப்புகள் ஏன் உருவாகின்றன என்றால், வெப்பம் மிகுந்தால் நிலத்தின் உள்பக்கங்களில் வாழும் உயிரிகள் அழிய நேரிடும். ஆகவே, நிலம் வெடிப்பு கண்டு வெளிக் காற்றை உள்ளே அனுப்பி குளிர்விக்கிறது.
எறும்பின் நுண்ணறிவு
சிகப்பு நிறத்திலான சுள்ளெறும்புகளின் எண்ணிக்கை மிகுந்தால் வெப்பம் உயரப்போகிறது என்று பொருள். பிள்ளையார் எறும்பு எனப்படும் கருப்பு நிற சிற்றெறும்புகள் மிகுந்தால் மழை பெய்யப்போகிறது என்று பொருள்.
மரத்தின் ஞானம்
மாமரம் வறட்சியில் மட்டுமே பூ பூத்து காய்க்கக் கூடிய வகையில் படைக்கப்பட்டது. முருங்கை மரமும் வறட்சியில்தான் காய்க்கும். அதிக நீர்பாய்ச்சினால் முருங்கை மரம் காய்க்காது. பலா மரத்திற்குக் குறைவான ஈரப்பதமும் அதிகமான வெயிலும் வேண்டும். இவை எல்லாமே கோடைகாலத்தில் காய்த்துக் குலுங்கக்கூடிய தாவரங்கள். இந்த ஆண்டு இந்த மூன்று வகையினங்களுமே தங்கள் பூக்களையும், காய்களையும் அழகாகக் குறைத்துக் கொண்டன. இந்த ஆண்டு முன்கூட்டியே மழை வரப் போகின்றது, நிச்சயமாகப் பூக்கள் உதிரும், பிஞ்சுகள் உதிரும், இந்தப் பருவ மழையில் காய்க்க முடியாது என்பதை மாமரமும், முருங்கை மரமும், பலா மரமும், அறிந்திருக்கின்றன. அதனால்தான், ஆனி மாதம் பெய்யப் போகும் மழையை உணர்ந்து மார்கழியில் பூக்களைக் குறைத்துக் கொண்டன அம்மரங்கள்.
மு.சந்தோஃச் குமார்