Press "Enter" to skip to content

மரபுக்கு திரும்புங்கள்

Santhosh Kumar 0

இன்றைய நவீன கட்டமைப்பில் இயற்கையை அதீதமாக சிதைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதே வேகத்தில் சென்றால் மனித இனம் 2100ம் ஆண்டை தாண்டுவதே சிரமம். ஆகையால் நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றி இயற்கையுடன் பொருந்திய இயல்பான எளிமையான வாழ்வை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கு நமது தேவைக்கு அதிகமாகவே அனைத்தும் உள்ளது ஆனால் ஆரம்பரத்திற்காதான் இயற்கை சிதைக்கப்படுகிறது. ஆடம்பரத்தை தவிர்த்து தேவையை நோக்கி பயணிப்போம்.

தற்சார்பு பொருளாதாரம்
நமக்கான தேவையை அனைத்து விதங்களிலும் நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். உணவு, உடை, இருப்பிடம், தொழில்கள், எரிசக்தி, கல்வி மற்றும் மருத்துவம் என அனைத்தும் நம்மை சுற்றிய அருகிலேயே அமைத்துக்கொள்ள வேண்டும்.

தற்சார்பு வாழ்வியல்
சராசரியாக 10000சதுரடி இருந்தால் போதும். ஒரு 4-5 நபர் இருக்கும் குடும்பத்திற்கான அடிப்படை தேவையையும் வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக வாழலாம்.

இயற்கை வழி வேளாண்மை
இன்றைய சூழலில் உணவால் புற்றுநோய்கள் அதிக அளவில் ஏற்படுவதற்கான காரணம் அதில் பயன்படுத்தும் இரசாயன உரங்கள் தான். அதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வேளாண்மை செய்யும்போது மண்ணுக்கு, சூழலுக்கு எந்த பாதிப்பும்யின்றி உடலுக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் உணவு உற்பத்தி வழிவகுக்கும்.

தமிழர் வேளாண்மை
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நிலம் உயரும்
நிலம் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
என அவ்வையார் பாடியுள்ளார். நமது நஞ்சை பூமியை வரப்பு உயர்த்தி அதில் அதிக அளவில் மழை நீரை நிறுத்து பாரம்பரியக் ரகங்களை விளைவித்து பயன்படுத்தலாம். இந்த முறையால் நிலத்தடிநீர் உயரும், புவி வெப்பம் தணியும், களை வராது, உரம் தேவையில்லை, நடவு பின் அறுவடை மட்டுமே. நஞ்சையில் புஞ்சையாக வடிவமைத்து அனைத்து பயிர்களையும் பல்லடுக்காக வைக்க முடியும்

நெல் எனப்படுவது நீருடை நிலமே!

வீட்டிற்கு வேண்டிய முக்கிய மரங்கள்
முருங்கை, சீதா, கறிவேப்பிலை, வேம்பு, தென்னை, வாழை, நெல்லி, மாதுளை, சப்போட்டா போன்ற மரங்களை இடத்திற்கு தகுந்தாற்போல் வைத்து பராமரிப்பது நமக்கு பயன்தரும்.

தமிழே நம் அடையாளம்
இயற்கையின் மொழி, இறையின் மொழி, பல மொழிகளுக்கு தாய்மொழி, உயிர் மொழி என பல பெருமைகளை தன்னகத்தே வைத்து இயல்பாக இயங்கும் நமது மொழியை நன்றாக பேசவும் எழுதவும் நாம் பலக வேண்டும். கூடுமான வரை மற்ற மொழி களப்பு இல்லாமல் பேசவும் எழுதவும் நமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தமிழில் அனைத்தும் உண்டு. தமிழை முறையாக பயின்றால் அறிவியல், எண்ணியல் எளிமையாக அறிவதுடன் இறையையும் இயற்கையையும் உணர முடியும்.

நாட்டு இனங்கள்
சூழல் சார்ந்த கால்நடைகள் வளர்க்கும்போது அந்த இனங்கள் அழிவதை தடுக்க முடியும். அந்த சூழலுக்கு பொருத்தமான ஆடு, மாடு, கோழி, நாய் என பலதரப்பட்ட கால்நடைகள் உள்ளன அவைகளை மீட்டெடுத்து பராமரிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

விதையே பேராயுதம்
இன்று நம்மிடம் பெரும்பாலான பாரம்பரிய விதை ரகங்கள் இல்லாமல் அழிந்துகொண்டு இருக்கின்றன. அந்த ரகங்களை தேடி அதை மீட்டெடுத்து அவரவர் கிராமத்தில் விதை வங்கியை ஏற்பாடு செய்வதுடன் பலருக்கு அதை பகிர்ந்து பரவலாக்க வேண்டும். மரபு விதைகளே நமது மண்ணுக்கும் சூழலுக்கும் உடலுக்கும் ஏற்றது.

மரங்களை காப்போம்
அதீத வறட்சி உள்ள கிராமங்களில் அதிக அளவில் ஒதியன் மற்றும் பலா மரங்களை நடுவது மூலமாக நிலத்தடி நீரையும் மழையையும் மீட்டெடுத்து பசுமையாக மாற்ற முடியும். அது போல் அந்த சூழுலுக்கு பொருத்தமான மரங்களை அதிக அளவில் நட்டு பராமரித்து சூழலை காக்க வேண்டும். ஆலம், அரசு, அத்தி, வேம்பு, புங்கன், நாவல், கொன்றை போன்ற மரங்கள் அதிகமாக நட்டு பாரமரிப்பது சிறந்தது.

மரபு கல்வி
குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு மரபு கல்வி அவசியமான ஒன்று. நம்மை சுற்றி இயங்கும் சூழுலை இந்த பூவுலகை புரிந்து அதை சிதைக்காமல் அதனுடன் ஒன்றி வாழ்வது எப்படி என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

மரபு கட்டுமானம்
இன்றைய கட்டுமனத்தால் பல உடல் பாதைகள் ஏற்படுவதுடன் பெரும் அளவில் இயற்கையும் சுரண்டப்படுகிறது. அதை எல்லாம் சீர் செய்யும் வகையில் மரபு கட்டுமானத்தை கையில் எடுக்க வேண்டும். பழமையான கோயில், கல்லணை எல்லாம் நமது மரபு கட்டுமானத்தின் சான்றுகள்.

மரபு மருத்துவம்
தமழர் உணவு முறையும் வாழ்வியல் முறையுமே பல நோய்களை அருகில் வரவிடாது. கூடுமான வரை ஆங்கில மருத்துவம் பயன்படுத்தாமல் நமது மரபு மருத்துவத்தை தெரிந்து அதை பயன்படுத்துவது பக்கவிளைவுகள் இல்லாத நிரந்தர தீர்வாக அமையும். எ.கா: புங்க இலை மட்டுமே நீரிழிவு, தைராய்டு, இரத்த கொதிப்பு, மூட்டு வலிகளுக்கு சிறந்தது.

நாட்டு மாடுகள்
சூழல் சார்ந்த இனங்களை வளர்பது வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும். அதனுடைய கழிவுகள் பெரிதும் உதவும். மாடும் கிராம சூழலும் போதும் அதை கொண்டு 40க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட பயன்பாட்டு பொருட்களை செய்யலாம். வேளாண்மை இடுபொருள், பூஜை பொருட்கள், அழகுசாதன பொருட்கள் என அனைத்தும் தயாரிக்கலாம்.

உணவு முறைகள்
கூடுமானவரை பிராய்லர், துரித உணவுகள்( fast food), சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள், கலர் பவுடர், பாக்கெட் பால், வெள்ளை சக்கரை(சீனி), அயோடின் உப்பு, மைதா போன்றவற்றை தவிர்த்து நமக்கே உரிதான நமது பிரதான சமையல் முறைகளை பயன்படுத்தி ஆரோக்கியமான உணவை உண்டு அறுசுவையை சரிவிகிதமாக கடைபிடித்து வாழ வேண்டும்.

பாரம்பரிய கலைகள்
நமது மரபு கலைகள் பல இன்று அழியும் நிலையில் உள்ளன. நமது பிள்ளைகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கலைகள் கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த கலைகளை மீட்டெடுத்து உயிர்பக்க வேண்டும்.

பனை பொருளாதாரம்
பனை நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அதன் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கன்டு, அதன் ஓலை கொண்டு ஏனைய பொருட்கள் செய்யலாம். அதை தொழிலாக இன்றும் பலர் செய்கிறார்கள். நிலத்தடிநீர் சேமிப்பதில் அதன் பங்கு அளப்பரியது. மண் அரிப்பையும் தடுக்கும் வல்லமை கொண்டது. பனையை காப்பதுடன் அதை பரவலாக அதிக அளவில் பெருக்க வேண்டும்.

மரபு தொழில்கள்
பல மரபு தொழில்கள் அழிந்ததின் விளைவு இன்றைய சூழல் வேலைவாய்ப்பு இல்லாமல் பலர் தவிக்கிறார்கள். பனை பொருட்கள், மூங்கில் பொருட்கள், தென்னை பொருட்கள், மண்பாண்டங்கள், மரவேலைகள், கைத்தறி நெசவு என ஏராளமான தொழில்கள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்றார் போல் அதை கற்றுக்கொண்டு சுயதொழிலாக செய்யலாம். எ.கா: மூங்கில் கொண்டு 1000 பொருட்கள் செய்ய முடியும்.

வேளாண் தொழில்கள்
தேனீ, காளான், ஆடு, மாடு கோழி, புறா, நாய், பூனை, முயல், பட்டுப்புழு, மண்புழு போன்றவைகளை சூழலுக்கு ஏற்ப வளர்க்கலாம். காய்கறி, பூ, பழங்கள், தானியங்கள், கிழங்குகள், மூலிகைகள் சாகுபடி செய்யலாம்.

மழை நீர் சேமிப்பு
வருடத்திற்கு நமக்கு கிடைக்கும் மழை குறைவாக இருந்தாலும் நமது பரப்பில் கிடைக்கும் மழைநீரை சேமித்து நமது அன்றாட உபயோகத்தற்கு பயன்படுத்தலாம். வீட்டில் அதற்கான சேமிப்பு அமைப்பை தயார் செய்து குடிநீராக உபயோகிக்கலாம். மழைநீர்-உயிர்நீர்.

குப்பை மேலாண்மை
கூடுமானவரை அதீத கழிவுகளை உண்டாக்காமல் இருப்பதே நல்லது. அதைமீறி உருவாகும் கழிவுகள் இந்த புவி சூழலை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். சூழலை கெடுக்க கூடிய பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முடியாதபட்சத்தில் பயன்பாட்டை குறைக்க வேண்டும் அதை மறுசுழற்சிக்கு உட்படுத்தவேண்டும். மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி பயன்படுத்தலாம். மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்பலாம்.

மாற்று எரிசக்தி
இன்றைய சூழலில் நாம் பயன்படுத்தும் எரிசக்தி அனைத்தும் இயற்கையை அதிக அளவில் சுரண்டுவதாக உள்ளது. புதுப்பிக்கும் மாற்று எரிசக்திக்கு மாற வேண்டும். சூரய மின்சக்தி, காற்றாலை, சான எரிவாயு களன் என அதற்கான கட்டமைப்பை மேற்கொண்டு அதை பயன்படுத்த வேண்டும்.

கிராமப் பொருளாதாரம்
ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்தும் அந்த கிராமத்திலேயே உற்பத்தியாகி அங்கேயே பயன்படுத்த வேண்டும் சூழல் சார்ந்த உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், கல்வி மற்றும் தொழில்கள் என அந்த கிராமம் சுயட்சையாக இயங்க வேண்டும். ஒவ்வொரு கிராமமும் எதற்காகவும் மற்ற கிராமத்தையோ அரசையோ நம்பி எதிர்பார்த்து இருக்க கூடாது. அதனதன் தேவையை அதுவே பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

பங்களிப்பு வாழ்க்கை முறை
ஒருவராக ஒரு ஏக்கர் வாங்கி அதை நிர்வாகம் செய்வது சாத்தியமற்றது. நிலம் வாங்கும் தொகை, அதை பராமரித்தல், மின் இணைப்பு, தண்ணீர் பயன்பாடு, வேலையாட்கள் என பெரும் தொகை செலவாகும். அதுவே 10 நபர்கள் சேர்ந்து 5ஏக்கர் என்று வாங்கினால் அனைத்தும் பகிர்ந்துகொள்ளலாம். அத்த 10 குடும்பங்களும் அவர்களுக்கு தேவையான அனைத்தும் விளைவித்து எடுத்துகொள்ளலாம். அவர்களே ஒன்றாக வேலை செய்யலாம். அவர்களுக்கு வேண்டிய கால்நடைகள் தொழில்கள் என அமைத்து ஒரு சமூகமாக பங்களிப்பு வாழ்கை முறையாக வாழ்ந்தால் பணதேவை இல்லாமல் மகிழ்வாக ஆரோக்கியமாக வாழலாம்.

நெகிழி வேண்டாம்
இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் நெகிழியுடன் இணைந்தே இருக்கிறது. அதை மாற்றியே ஆக வேண்டும் அதன் பயன்பாட்டை பொருமளவில் குறைத்தாக வேண்டும். அதற்கு மாற்றாக இருக்கும் மக்ககூடியவற்றை பயன்படுத்தலாம். இயன்றவரை பெருநிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்காமல் நமக்கு தேவையானவற்றை நாமே தயாரித்து உபயோகிப்பது நன்மை பயக்கும். பல்பொடி, குளியல் பொடி, முகபூச்சு, சத்துமாவு, மூலிகை பொடிகள், கொசு விரட்டி என அன்றாட தேவையான அனைத்தும் நாமே தயாரித்து பயன்படுத்தலாம்.

இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும். அதை விட்டு விலகி அதை சுரண்டி வாழ்ந்தால் நம்மை இந்த புவியிலிருந்து அப்புறப்படுத்தும்.

மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும், ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழமுடியாது.

நாம் செய்யும் தவறால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. விரைவில் மனித இனமும்…

ஜே.சி.குமரப்பா மற்றும் நம்மாழ்வார் பற்றி தேடி தேடி படியுங்கள் இயற்கையை நேசியுங்கள்.

எளிமையான இயல்பான வாழ்வை இயற்கையின் பேராற்றலுடன் இறையின் ஆசியிடன் வாழுங்கள். வாழ்க நலமுடன், வளமுடன். மகிழ்வோடு இருங்கள்.

தொகுப்பு:
மு.சந்தோஃச் குமார்
அலைபேசி: 9965483828
மின்னஞ்சல்: [email protected]
வலைதளம்: www.agriculturalist.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.