கட்டுமானத்தில் மூங்கிலின் பங்கு & மூங்கிலின் பல்வேறு பயன்கள்
புல்லினத்தின் பெருமை “மூங்கில்”
பச்சை தங்கம் என்ற சிறப்பு பெயர் கொண்ட மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை வளரும் திறன் கொண்டவை.
வகைகள்
இதில் பலவகை உள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் 100 வகைகள் உள்ளன. பெரும்பாலான மூங்கில் வகைகள் நடுப்பகுதியில் துளை உள்ளவை. 3 இஞ்சுக்கு குறைவான அளவில் உள்ள வகைகளை சிருவாரை என்றும் அதற்கு அதிகமாக உள்ளவற்றை பெருவாரை எனவும் வகைப்படுத்தப்படுகிறது.
பயன்கள்
மூங்கிலின் பங்கும் அதன் பயன்பாடும் இன்றியமையாதது. 1000 க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யலாம். கூடை, முறம், பாய்கள், கைவினை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள், அணிகலன்கள், மேசை, இருக்கை, கட்டில், கட்டுமானம், இசை கருவிகள், ஏணி மற்றும் வேளாண்மைக்கு என பல வகைகளாக தனது பங்களிப்பை தருகிறது.
பிரதான உணவு
உலகில் பல்வேறு மக்களின் உணவுகளில் மூங்கில் குருத்து முக்கியமானதாக இருக்கிறது. இதில் புரதம், பாஸ்பரஸ் சுண்ணாம்பு, நார்ச்சத்து, இரும்பு சத்து, விட்டமின் பி3 என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. தோல்வறட்சி, உயிர் சத்து குறைபாடு, தயாமின் குறைபாடு, எலும்புருக்கி நோய், மாலைக்கண் நோய், உயர் ரத்த அழுத்தம், உள்ளுறுப்புகளின் கழுவுகள் நீக்க, உடல் எடை குறைப்பு என பலவற்றுக்கும் நல்ல பயனுள்ள மருத்துவ உணவாக பயன்படுகிறது.
மூங்கில் அரிசி
அதுபோல் 40வருடங்கள் வயதான முற்றிய மூங்கில் பூக்கும் பூவிலிருந்து கிடைப்பது மூங்கில் நெல். இந்த மூங்கில் அரிசியும் பிரதான உணவாக இருக்கிறது. அதீத மருத்துவ குணம் நிறைந்தது.
சூழல் பயன்பாடு
மூங்கில் சுத்திகரிப்பு மற்றும் நமது எதிர்கால தலைமுறையினருக்கும் ஆரோக்கியமான பசுமையான உலகின் மரபுவழியை கடந்து செல்கிறது. உயரமான அதிசய புல் ஒரு நிரந்தரமான முடிவில் நம் அதிகரித்துவரும் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தீர்வுகளை உருவாக்குகிறது. வளரும் மற்றும் வளர்ச்சியுற்ற நாடுகளில் மூங்கில் பொருளாதார வாய்ப்புகள் உலக அளவிலான எண்ணற்ற வாழ்வாதார திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. அழகியல் மற்றும் பயன்பாட்டு நன்மைகளுக்காக மூங்கில் சார்ந்திருத்தல் முதல் உலகில் கூட்டு விகிதத்தில் வளர்ந்து வருகிறது.
உற்பத்தி விகிதம்
மூங்கில் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இருப்பது இந்தியாதான். மூங்கில் கொண்டு கட்டபடும் ஒரு வீட்டின் ஆயுட்காலம், சுமார் 30 வருடங்கள். பராமரிப்பை அதிகப்படுத்தினால், இன்னும் 10 வருடங்களுக்குக்கூட இருக்கும்.
வளங்கள் அழிப்பு
சிமென்ட், ஜல்லி, ஆற்று மணல், கம்பிகள் போன்ற உயிரற்ற ஒரு கட்டிடத்தை உயிர்வால அமைப்பது எந்த வகையில் உத்தமம்? அதனால் அதீதமான இயற்கை சிதைவும் ஏற்படுகிறது. அவைகள் இல்லாமல் மரபு கட்டுமானமாக சூழல் சார்ந்த பொருட்களை கொண்டு கட்டுமானம் உருவாக்கலாம். அதற்கு உதாரணமாக விளங்குவது மூங்கில் கட்டுமானம். மூங்கில் விரைவாக வளரக்கூடியது, வளர்ச்சியை தாங்கி வளரும், அதை படுத்துவதால் சூழல் கேடும் இல்லை.
இரும்பு மூங்கில்
ஒரு டன் இரும்பு கம்பிகள் உற்பத்தி ஆக 2டன் கரியமிலவாயுவை வெளியிடுகிறது. அதுவே ஒரு டன் மூங்கில் உற்பத்தியாக 2டன் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு உயுர்வளியை(ஆக்சிசன்) தந்தும் பயன் தருகிறது. அத்துடன் மூங்கில் கொண்டு கட்டபடும் வீட்டை இடி தாக்காது என்பர்.
உயிர் கட்டுமானம்
மரபு கட்டுமானத்தில் சுவர்கள் சுவாசிக்கும். அத்துடன் வெப்ப காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் மழை காலத்தில் மிதமான வெப்பத்துடனும் இருக்கும். பகல் நேரத்தில் மிதமான குளிர்ச்சியும் இரவு நேரத்தில் மிதமான வெப்பத்தையும் உணரலாம். உயிருள்ள வீட்டை கட்டி உயிர்ப்புடன் வாழுங்கள்.
மூங்கில் கான்கிரீட்
சாதாரணமாக கம்பிகள் மற்றும் சிமென்ட் கொண்ட கான்கிரீட் கலவை அதிக அழுத்த மற்றும் இழுவை (விரிவடையும்) திறன் கொண்டது. அதற்கு மாற்றாக மூங்கில் பயன்படுத்தலாம். சிலர் இதை வெற்றிகரமாக உபயோகித்தும் வருகிறார்கள்.
கான்கிரீட்-ல் மூங்கிலின் தன்மை
மற்ற மரங்களை விட மூங்கில் அதிக நார் தன்மை கொண்டது, அதிக இழுவை திறன் உடையது, உறுதியானது, எளிதில் மக்காது, மலிவானது மற்றும் எளிதில் கிடைக்கக்கூடியது.
பயன்படுத்தும் முறை
முதிர்ச்சியான இலைகள் உதிர்ந்த மூங்கிலை வளர்பிறை நாளில் வெட்டி எடுத்து பயன்படுத்துவது சிறந்தது. கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் மூங்கிலை தீயில் வாட்டினால் பூச்சு, புழுக்கள் மற்றும் கரையான் பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.
நவீன முறையில் கம்பி கட்டி சிமென்ட் கலவை போட்டு கான்கிரீட் அமைப்பது போன்று மூங்கில் வைத்து சிமென்ட் கலவை அல்லது தரமான சுண்ணாம்பு கலவை பயன்படுத்தி அதன் உறுதியை அதிகப்படுத்தலாம்.
இந்தியாவில் மூங்கில் கொண்டு சுயதொழில் செய்யும் மக்கள் மேற்கு வங்கத்தில் மணிப்பூர், சிக்கிம் பகுதியில் அதிகம் உள்ளனர்.
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய நாடுகளில் பெரும் அளவில் மூங்கிலை பயன்படுத்துகிறார்கள்.
நமது பகுதியில் இது சார்ந்த விழுப்புணர்வும் அடிப்படை பயிற்சியும் இருந்தால் சுயதொழிலாக முன்னெடுக்கலாம், நமக்கான கட்டுமானத்திற்கும் பயன்படுத்தலாம்.
மூங்கில் கொண்டு கூரை மேய்வது ( நாட்டு ஓடுகள் அடுக்குவது போன்று மூங்கில் அடுக்கலாம்), பாலம் அமைப்பது, பில்லர் மற்றும் தாங்கும் தூண் போன்றும், படிகட்டுகள், தரை, சுவர் என எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம். நமக்கு ஏற்றார் போல வடிவமைப்பை உருவாக்கலாம்.
இயற்கையோடு இயந்த அரோக்கியமான இன்பமான வாழ்வை வாழவும். மகிழ்வோடு இருங்கள்.
“கோகுலம் கதிர்” மாத இதழுக்காக (மார்ச் 2019) பிரதேயமாக எழுதப்பட்டது.
-மு.சந்தோஃச் குமார்