Press "Enter" to skip to content

மண்பானையில் பொங்கல் வைப்பதே மகிமை

Santhosh Kumar 0

மாலை மலர் நாளிதழுக்காக (13-01-2020) பொங்கல் சிறப்பு கட்டுரையாக தொகுக்கப்பட்டது.

பொங்கல் நமது மரபு பண்டிகை. சுமார் 5000 வருடங்கள் பாரம்பரியம் கொண்டது. இன்றைய நவீன இயந்திர வாழ்க்கையில் எல்லாமே வேகமாகவும் வெறும் சம்பிரதாயமாக கொண்டாடும் மனோபாவம் உருவாகிவிட்டது அதன் விளைவு நம் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியமாக கொண்டாடிய பொங்கல் பண்டிகை இன்று வெறும் சாதரணமாக அதன் மரபு தவறி கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை என்றாலே, புது மண் பானையில் பொங்கலிடுவதுதான் தமிழர்களின் சிறப்பு. ஆனால், காலமாற்றத்தால் தற்போது பித்தளை, எவர்சில்வர், அலுமினியம் போன்ற பாத்திரங்களே அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இதன் விளைவாக பராம்பரியம் மிக்க மண் பானையில் பொங்கலிடுவது தற்போது நகரங்களில் முற்றிலும் அழிந்துவிட்டது.

கிராமங்களிலும் இதன் பயன்பாடு குறைந்து வருவது வேதனைக்குரியது.

“பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பதற்கேற்ப, குயவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடிய வகையில், வீடுகளில் உள்ள பழைய மட்பாண்டங்களை (பானைகள், குடிநீருக்காக பயன்படுத்தும் குவளைகள்) பொங்கலுக்கு முன்தினம் போட்டுடைத்து விட்டு, தைத்திங்கள் முதல் நாளில் இருந்து புதிய பானைகளில் சமைக்கும் வழக்கமும் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது.

நம் நாட்டு மாடுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக ஜல்லிகட்டு மூலம் அதன் தொன்மையையும் மரபையும் பாதுகாத்து இன்று பலரும் நம் நாட்டு இனங்களை பாதுகாத்து வளர்த்தும் அது சார்ந்து விழுப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். அதுபோல் நமது பாரம்பரிய உடையான வேட்டிகாக கூட வேட்டி தினம் என்று முன்னெடுத்து அதன் அருமையை புரிய வைத்துள்ளார்கள் பலர் வேட்டி அணிய ஆரம்பித்தார்கள். இருப்பினும் நம் மரபில் வாழ்வில் அதீத பங்கு வகுத்த மண்பாண்டம் ஏனோ இன்னும் அனைவரிடமும் ஒர் முக்கிய அங்கம் விகிக்காமல் இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு கூட பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறோம்.

மண்பானையை மறந்து ஆரோக்கியம் இழந்து பாரம்பரியத்தை சிதைத்து வெறுமனே சம்பிரதாயமாக தான் இன்றைய பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டைய காலம் தொட்டே ஒரு பண்டிகை கொண்டாட்டம் என்றால் அதில் அனைவரின் உழைப்பும் பங்களிப்பும் இருப்பது தான் அதன் சிறப்பே. அப்படி தான் பஞ்ச பூதங்கள் அடங்கிய இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதம் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மண்ணில் விளைந்த கரும்பு, மஞ்சள், அரிசி மற்றும் மண்ணால் ஆன மண்பானை, மண்ணடுப்பு பயன்படுத்தி புதிதாக அறுவடை செய்த அரிசியையும், கரும்பிலிருந்து காய்ச்சி எடுத்த வெல்லத்தையும் கொண்டு பொங்கல் வைத்தோம்.

குயவர்கள் எல்லோருக்குமான மண்பானை உபயோக பொருட்கள் செய்து பயனடைந்தார்கள். ஆனால் இன்றோ அவர்களின் வாழ்வாதாரம் நலாவடைந்து பலர் தங்கள் குலதொழிலை விட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். இருப்பினும் சிலர் இன்னும் இத்தொழிலை உயிர்ப்புடன் செய்துவருகின்றனர். அவர்களை போற்றும் விதமாகமும் நமது பண்பாட்டை பறைசாற்றும் விதமாகவும் நாம் பொங்கல் அன்றாவது மண்பானையில் பொங்கி மரபை காக்க வேண்டும்.

வேகம் வளர்ச்சி நவீனம் என அனைத்தையும் இழந்து புவியையும் சிதைத்துவட்டோம். நம் மரபில் பயன்படுத்திய அனைத்தும் இயற்கையை பாதிக்காத தேங்கும் குப்பைகளாக இல்லாமல் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஒன்றாகவும் அதன் வாயிலாக சூழலுக்கும் எந்த உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லாததாகவும் இருந்தது.

இன்றைக்கு காலமாற்றத்தினாலும், சொகுசா வாழ பழகிவிட்டதாலும், பழமையை மறந்து குக்கர் பொங்கலுக்கு மாறிவிட்டோம். ஆனால், மண்பானையில்தான் பொங்கல் வைக்கவேண்டும். அதுக்கு காரணமுமிருக்கு.

நாம் வாழும் இந்த பூமியானது ஆகாயம், காற்று, நீர் , நெருப்பு, நிலம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது. நமது உடலும் கண்,காது, மூக்கு, மெய், வாய் எனப்படும் பஞ்சபூதங்களால் ஆன சேர்க்கையே. நாம் உண்ணும் உணவும் பஞ்சபூதங்களால் ஆனதே. நிலத்தில் விளைந்த தானியத்தை ஆகாயத்தின்கீழ் நீரோடு சேர்த்து, நெருப்பின் உதவியால் வேக வைக்க, காற்றை உள்வாங்கி நாம் உண்ணும் பொருளாய் மாற்றுகிறது.

பஞ்சபூத தத்துவத்தில் மண்பானை குடிநீர், நில மற்றும் நீர் தத்துவத்தை குறிக்கிறது. மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள். இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

இவை மட்டுமல்ல, நாம் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுமே பஞ்சபூதங்களின் சேர்க்கையே! இந்த வாழ்வியல் தத்துவத்தை நமக்கு உணர்த்தவே, நிலத்தில் இருக்கும் மண்ணை கொண்டு, நீர் சேர்த்து, பக்குவமாய் பானை செய்து ஆகாயத்தின்கீழ் வெட்டவெளியில் காயவைத்து நெருப்பின் உதவியோடு சுட்டெடுத்தால் அழகிய பானையாக உருவெடுக்கும். பஞ்சபூதங்கள் சரிவிகிதத்தில் ஒன்று சேர்ந்தால் அழகிய, அனைவருக்கும் உதவக்கூடிய, ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத பொருளாய் மாறும். இதுப்போல மனிதனும் தனது ஐம்புலன்களை சரிவிகிதமாய் நல்லவிதத்தில் பயன்படுத்தினால் வாழ்க்கை அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறும் என்பதை உணர்த்தவே மண்பானையில் பொங்கல் இடுவது வழக்கம்.

பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்குக்கூட தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது.

இன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்… மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகறிக்கும் கருவி மண் பானை ஆகும்.

பொங்கல் அன்று புதுப்பானையில் பொங்கல் வைப்பது ஐதீகம். ஆதலால் இப் பண்டிகையின் போது அனைவரும் மகிழ்வுடன் இருப்பார்கள். பனி விலகி சூரியன் உதயமாவது போல்… வறுமை ஒழிந்து மகிழ்வு பொங்க… வேளாண் பொருட்கள் பல மாதங்களுக்கு பின் அறுவடைக்கு வந்து விற்பனைக்கு தயாராக மற்றும் கரும்பு, வெல்லம், மஞ்சள், மண்பானை, அரிசி என இதனை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் முதல் விற்பனையாளர்கள் வரை அனைவரும் மகிழ்வோடு இருப்பர் ஆதலால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் கூறுவர்.

மண்பாண்டங்களின் விற்பனை காலத்திற்கு ஏற்றார்போல மாறுபடுகிறது, கார்த்திகை மாதத்தில் அகல்விளக்கு, தை மாதத்தில் பொங்கல் பானை வெய்யில் காலங்களில் சாதாரண தண்ணீர்பானை என தயாரிக்கப்பப்படுகிறது. ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதற்கு தகுந்த வருமானம் ஈட்டமுடியாத நிலையில் உள்ளார்கள். மழைக்காலங்க­ள் வந்துவிட்டால் தொழில்முற்றிலும் முடங்கிவிடும் .குறைந்த வருமானம் கிடைபதால் நவீன இயந்திரங்கள் மற்றும் அச்சுக்கள் வாங்க இயலாத நிலையால் குயவர்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.பரம்பரை பரம்பரையாக இந்த தொழில் செய்பவர்களால்தான் இந்த மண்பாண்டங்கள் தயாரிக்க முடியும். ஆனால் இந்த கணினி காலத்தில் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடவே இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை, இந்த நிலை நீடித்தால் பிற்காலத்தில் மண்பாண்டகங்ள் செய்ய ஆள் இல்லாத அவல நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு.

மண்பானையில் பொங்கல் வைப்பதால் மரபோடு பண்டிகையை தொடங்குவதுடன் பல குயவர்களின் வாழ்வில் ஒளி வீசவும் உதவுவதுடன் மரபை பண்பாட்டை ஆரோக்கியத்தை மீட்ட ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். மண்பானை இல்லாமல் வைக்கும் பொங்கலும் முழுமையில்லாத பொங்கலே. பொங்கலை மண்பானையில் வைத்து இந்த தை பொங்கலை அனைவருக்கும் இன்பம் பயக்கும் தொடக்கமாக தொடங்கலாம்.

எதிர்வரும் காலங்களில் சமையல் செய்வதற்கு மண்பாண்டம் பொருட்களின் பயன்பாட்டை அதிகபடுத்தி வாழ்வை ஆரோக்கியமாகவும் மகழ்வாகவும் மற்ற முனைவோம்.

நமது அருகாமையில் கிடைக்கும் பொருட்களையும் உள்ளூர் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதால் நமது கிராம பொருளாதாரம் உயர்வதுடன் நாமும் பயன்பெறலாம்.

ஒரு பண்டிகை என்பதன் நோக்கமே பலரும் பலதரபட்ட மக்களும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதே. ஆதலால் தான் அனைத்து விதமான பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது. அந்த பொருட்களை உற்பத்தி செய்யும் அனைவருக்கும் வாழ்வாதாரம் ஏற்படுத்தும் விதத்தில் அந்த பண்டிகையின் சிறப்பும் இருக்கும். பொங்கலின் போது தான் புது பானைகள் வாங்குவர். மற்றும் கார்த்திகை தீப ஒளி திருநாளில் நிறைய அகல்விளக்கு வாங்குவர் ஆதலால் குயவர்களின் பொருளாதாரம் இந்த குறிப்பிட்ட பண்டிகையில் சிறப்பாக இருப்பதோடு மிகழ்வோடு இருப்பார்கள்.

உலகுக்கே வேளாண் முறையை கற்றுத்தந்த நமது உழவர்களை போற்றவும், உலகுக்கே வாழ்வியலை வகுத்து தந்த நமது ஐய்யன் திருவள்ளுவரை போற்றவும், தமிழர் வேளாண்மையை திரும்பவும் மீட்டெக்க, நமது மரபு வாழ்வியலை பின்பற்ற இந்த புதிய ஆண்டில் சபதமேற்று தொடங்குவோம். தமிழர் வாழ்வியல் மட்டுமே ஒரு முற்று பெற்ற வாழ்வியல் இதில் அனைத்திற்குமான தீர்வு உண்டு. இயற்கைக்கு திரும்புவதற்கான பாதையின் தொடக்கமாக இந்த தைமாத புதிய ஆண்டு அமையட்டும்.

எல்லா வளமும் செல்வமும் பொங்க வாழ்த்துக்கள்.

மு.சந்தோஃச் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.