ஊழி தாண்டவம்
சிறு நுகர்வு வாழ்வியல்
தற்சார்பு
நாடு 21 நாட்களுக்கு முடங்கப்போகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன்… இந்த நேரத்தில் தங்கம், கார், பங்களா வாங்க முனைவீர்களா? அல்லது உணவு பொருட்களை சேமிப்பீர்களா? இப்போது புரிகிறதா அத்தியாவசிய தேவை எது, ஆடம்பர தேவை எது என…?!
எவை எல்லாம் வேண்டாம் என்ற பெரிய பட்டியலை விட, எது வேண்டும் என்ற சிறிய சிந்தனையே சரியானது. அதுவே சிறியதே அழகு.
இப்போது இந்த உலகமே முடங்கி கிடக்கிறது. நாம் நம்மை இந்த சூழலுக்கு தகுந்தாற்போல் நம்மை மாற்றிக் கொண்டோம். உணவு உடல்நலம் தாண்டி எதையும் சிந்திக்க இயலாமல் கட்டுண்டு கிடக்கிறோம்.
எங்கும் எதுவும் பெருவாரியாக இயங்கவில்லை. எல்லோரும் சிறு நுகர்வு வாழ்வியலை மேற்கொள்கிறோம். இப்போது தான் நாம் உண்மையாக இந்த புவிக்கு நம்மை செய்கிறோம்.
ஆடம்பர பொருட்கள் இன்றி யதார்தமான எளிமையான அடிப்படை தேவைகள் கொண்டு வாழ முடியும் என அனைவருக்கும் இந்த காலம் புரிய வைத்துவிட்டது.
உலக நாடுகளும் பல சூழல்வாதிகளும் புவியை காக்க சூழல்கேடு, புவி வெப்பமயமாதல், காற்று மாசு, வளங்கள் அழிப்பு என பலவாறாக எச்சரித்தனர். எல்லாவற்றையும் குறைக்கவும் ஆசோசனை வழங்கினர். ஆனால் இப்போது அதுவாகவே நிகழ்கிறது. எல்லோரும் அடிப்படை தேவைகளை தாண்டி யோசிக்ககூட இல்லை.
ஒரு வேலை போர் சூழலாக இருந்தால் கூட இந்த அளவு எல்லாம் இயங்காமல் இருந்திருக்காது. இயற்கை பேரிடராக இருந்திருந்தால் கூட எதோ சில பகுதி தான் பாதிப்புக்குள்ளாகி இருக்கும். ஆனால் இது வளர்ச்சிக்கும் அறிவியலுக்கு சவால் விடும் நோய் தாக்குதலாக மனித இனத்திற்கு பெறும் சவாலாக அமைந்து நம்மை முடக்கிவிட்டது.
உடற்பயிற்சி கூடாரங்கள், அழகு சாதன நலையங்கள், பெரிய வணிக வளாகங்கள், உணவுக் கூடங்கள், மகிழுந்துகள், பேருந்துகள், வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கோயில்கள், என இவை அனைத்தும் இல்லாமல் இருக்க இயற்கையே ஒரே வழிவகை செய்துள்ளது. இது வெறும் முன்னோட்டமே இது போல் பல்வேறு விதங்களில் வரும் காலம் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும். அதை சமாளிக்க இப்போது போலவே எப்போதும் இருக்ககூடிய வாழ்வியலை கையில் எடுப்போம். இனியேனும் ஆடம்பரமான வாழ்வை, அதீத நுகர்வு கலாச்சாரத்தை தவிர்து எளிமையான இயற்கையுடன் கூடிய சிறு நுகர்வு வாழ்வியலை கையில் எடுப்போம். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவான அனைத்தையும் செயல்படுத்துவோம். உணவு தேவையை நம்மை சுற்றி பூர்த்தியாகும் வகையில் வழிவகுப்போம். ஆடம்பரமான தேவைக்காக உழைக்காமல், அடிப்படை தேவைக்காக உழைப்போம். தற்சார்பு அடைவோம் உணவு, உடை மற்றும் இருப்பிடதை எளமையாக வடிவமைப்போம். நிலம் வாங்கி தங்களுக்கான உணவு காட்டை தயார் செய்வோம்.
தற்சமயம் கோடீஸ்வரர்கள் கூட பத்தாயிரத்தில் திருமணம் செய்கிறார்கள். உதாரணமாக 1000-2000 அழைபிதழ் அடிக்க எந்த அச்சு நிறுவனமும் இயங்க வில்லை, அப்படியோ அழைபிதழ் தயார் செய்தாலும் 20-30 நபர்களுக்கு மேல் சுபகாரியங்களில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஆரம்பரமான உடைகளை வாங்க எந்த ஜவுளிகடையும் இல்லை. தங்க ஆபரணங்கள் வாங்கவும் முடியாது. அது தான் நிதர்சனம்.
ஆடம்பரம் தவிர்த்து அடிப்படை தேவைகளுக்காக வளங்களை பயன்படுத்துவோம். இருப்பது ஒரு பூமி காப்பது நம் கடமை. இந்த பூவியை இதில் இருக்கும் வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
அறிவியல் ,வளர்ச்சி, தொழிற்நுட்பம் என எவ்வளவு உயரம் பறந்தாலும்… இயற்கை எதோ ஒரு மூளையில் தன்னுடைய வலிமையான முகத்தை காட்டவே செய்கிறது.
வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால் அதில் எந்த உயிரினம் மற்ற உயிரினத்தை அதீதமாக அழித்ததோ அது இயற்கையால் அழிக்கப்பட்டு முற்றிலுமாக புவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும். அதுவே விருப்பு வெறுப்பின்றி எவ்வித லாப நோக்கமற்று எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சக மற்ற உயிரினங்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக பயன்படக்கூடியதாக இருக்கிறதோ அதை இயற்கையே பேணி பாதுகாக்கும் இல்லையேல் துடைத்து எறியப்படும்.
நாம் எப்படி பல்லுயிர்களுக்கு பயனுள்ளதாக இயற்கையோடு கூடிய எளிமையான இணைந்த வாழ்கை வாழலாமா அல்லது ஆடம்பர தேவைக்காக நம் புவி தாயை சுரண்டலாமா?
‘விடுதலை’ என்பது என்னவென்றால், நீங்கள் யாரென்பதை நீங்கள் உணர்ந்துகொள்வதுதான்.
எளிமையான வாழ்வியலை வாழ்வோம். அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம்.
நாம் இப்படி சிறு நுகர்வில் வாழ்ந்து அப்படி என்னத சேமிக்க போகிறோம் என கேட்டால்?
இப்படி நாடு முழுவதும் முடங்கி கிடப்பதால் தற்போது பொருளாதார சிக்கல் தாண்டி வளங்கள் சுரண்டப்படுவதில்லை, காற்று மாசு வெகுவாக குறைந்தது, பல காடுகள், மலைகள், கனிம வளங்கள் அழிக்கப்படாமல் இருக்கிறது, குப்பைகள் அதிகம் சேரவில்லை, புதிய உற்பத்திக்காக நீர் உறிஞ்சப்படவில்லை, மின்சார பயன்பாடு குறைந்துள்ளது, வனவிலங்குகள் அழிக்கப்படாமல் இருக்கிறது, இன்னும் பல… பணம்,பொருளாதாரம், GDPA, படிப்பு, வேலை மட்டுமே வாழ்க்கையில் முக்கியமல்ல…
இங்கு குறிப்பிட்டவை பணம் சேமப்புக்காக அல்ல, வளங்கள் சேமிப்பு பற்றியவை. தமது புவிதாயை உயிர்ப்புடன் பல ஆண்டுகள் வைத்தருக்க வேண்டிய கடமை மனித இனத்திடம் தான் உள்ளது.
இப்போது நடக்கும் கால சூழலை பார்த்தால் அன்று ஐயா நம்மாழ்வார் கூறியவைதான் நினைவுக்கு வருகிறது…
“என்றோ ஒருநாள், ஏதோ ஒரு காரணத்தினால், உனக்காக எங்கிருந்தோ வந்து கொண்டிருந்த உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவது நின்று போயிருக்கலாம். கப்பல்கள் மிதப்பதையும், விமானங்கள் பறப்பதையும் கூட நிறுத்தியிருக்கலாம். ஆனால் உனக்கான உணவை நீ உற்பத்தி செய்யப் பழகியிருந்தால், இவற்றையெல்லாம் எண்ணி அஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது.”
மரபுக்கு திரும்புவோம் ஏனெனில் அதுவே முற்று பெற்ற வாழ்வியல்.