
தேவாங்கு முற்புதர் காடுகளில் காணப்படும் ஒரு இரவாடி மற்றும் மனிதகுரங்கு இனத்தின் முன்னோடியான” primate ” குடும்பத்தை சேர்ந்தது . தேவாங்கு ஆதிக்குரங்கினம், கிப்பன், ஒராங்குட்டான், கொரில்லா,சிம்ப்பன்சி, மனிதன் ஆகியவைகளுக்கு முதனி. இவ்விலங்குகள் பெரும்பாலும் அடர்ந்த மரங்கள், முட்புதர்க் கொண்ட காடுகள், காடுகள் அருகில் உள்ள விளைநிலங்களில் வாழ்கின்றன. பகலில் சிறு குடும்பங்களாக அடர்ந்த மரக்கிளைகளை பற்றிக்கொண்டு தூங்கும். இரவில் தனியாக இரைகளை தேடும்.
தேவ வாக்கு விலங்கு, வடக்கு திசை காட்டும் விலங்கு என்றும் தேவாங்கை அழைப்பதுண்டு.
இரவாடியான இவைகள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கையை மரத்திலேயே கழிக்கின்றன.
இதன் இனப்பெருக்க காலமான கோடை காலத்தில் இரு குட்டிகளை ஈன்றெடுக்கும் இவ்விலங்கின் கருத்தரிப்பு காலம் 166 முதல் 169 நாட்களாகும்.
இதன் குட்டிகளுக்கு 5 முதல் 6 மாதங்கள் வரை பாலூட்டி தன் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளும் பிறக்கும்போது குட்டிகளின் எடை 30 கிராம் வரை இருக்கும் தேவாங்குகள் 12 – 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்று கூறப்படுகிது.
தேவாங்குகள், பூச்சிகளை விரும்பி உண்பவை. ஒரு மணிநேரத்தில், 100 பூச்சிகள் வரை உண்ணும். இவை பூச்சி கொல்லிகளின் தேவையை குறைத்து, நெற்பயிர்கள் மற்றும் தாவரங்களை சேதப்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
இயற்கையில் பூச்சிகளை கட்டுப்படுத்தி சூழல் சமநிலையை மேம்படுத்திய ஒரு உயிரினம், மனிதர்களின் செயலால் இதன் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, இன்று இதன் வாழிடம் சுருங்கி அழியும் நிலையில் தள்ளப்பட்டு விட்டது.
காண அரிதாக மாறியது, மனிதர்களின் நோய்க்கு மருந்தாகும் என்று எண்ணிலடங்கா வேட்டை தொடர்ந்ததால். தோசம் நீக்கும் நோய்கள் தீர்க்கும் என்று கழுத்துக் கயிற்றை இவற்றை கொண்டு உருவச்செய்து அணிவார்கள் இதனை கூண்டில் இட்டு வளர்ப்பார்கள். பெரிய கண் கொண்டதால் கண் இருந்தும் அறிவுக் கண் இல்லா மானுடன் இதன் கண்களை சாப்பிட்டால் பார்வை தெளிவாகும், இரவிலும் காணுதல் சிறப்பாகும் என்று உண்டே இவற்றை அழித்தான். தொழு நோய்க்கும் காச நோய்க்கும் மருந்து இதன் உடல் பாகம் என்று உள்ளூர் முதல் வெளி நாடு வரை கடத்தப்படும் ஒரு உயிரினம்.
இவைகள் மருந்திற்காகவும், தாந்திரிக பூஜைகளுக்காகவும் வேட்டையாட பட்டு தற்போது எணிக்கையில் குறைந்த அழியும் விளிம்பில் உள்ளது. காடழிப்பு, விவசாயத்திற்காக நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் 4.7 கோடி வருடங்களாக வாழ்த்து வருகின்ற இவ்விலங்கு அழிந்துவரும் வன விலங்குப் பட்டியலில் இப்போது இடம் பெற்றுவிட்டது.
தமிழகத்தில் சிறு விலங்குகளுக்கு சரணாலயங்கள் உள்ளன. குறிப்பாக, கோடிக்கரையில் வெளிமான்களுக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் சாம்பல் நிற அணில்களுக்கும், களக்காட்டில் சிங்கவால் குரங்குகளுக்கும் சரணாலயங்கள் உள்ளன. அதுபோல், அய்யலூர் காட்டுப் பகுதிகள், ஒதுக்கப்பட்ட காடுகளாக இருந்தாலும் அதை தேவாங்குகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.
அதுவும், காட்டுப் பகுதி மக்கள் பங்களிப்புடன் இந்த சரணாலயம் அமைக்கப்பட்டால், அது தமிழகத்தில் வனவிலங்குகள் பாதுகாப்பில் ஒரு மிக முக்கிய மைல் கல்லாக விளங்கும், என்பதில் ஐயமில்லை.1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி, பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இவை சேர்க்கப்பட்டன. ஆனால், மூடநம்பிக்கை காரணமாக தொடர்ந்து வேட்டையாடப்படுகின்றன. அருகி வரும் இந்த அரிய விலங்கினத்தை காப்பாற்ற வனத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றை காக்க முன்னெடுப்பதின் மூலம் இயற்கையின் ஒரு பகுதியான முட்புதர்க்காடுகளும், அப்பகுதியை சேர்ந்த பிற விலங்கினங்களும், தாவரங்களும் காக்கப் படும்.
சாம்பல் நிற தேவாங்கு களை பெரும்பாலும் மலைப்பாம்பு கழுகுகள் உணவாக உட்கொள்கின்றன. இத்தகைய அரிய வகை வன விலங்கு அதிக அளவில் கொண்டிருக்கும் கடவூர் மலையை வன சரணாலயமாக மாற்றினால் சாம்பல்நிற தேவாங்கை அழிவிலிருந்து காக்க முடியும்.

ஒரு நாட்டின் இயற்கை வளம் பாதுகாக்கப்பட்டால் தான் அந்நாடு செழுமையாக இருக்கும் கரூர் மாவட்டத்தில் வனங்களின் பரப்பளவு மிகவும் குறைவாக இருப்பதால் தான் இங்கு பருவமழையும் குறைவாக பெய்கிறது நாடு விடுதலை அடைவதற்கு முன்பு 63000 ஹெக்டேர் நிலப்பரப்பை கொண்ட கடவூர் மலை 1979 -80களில் அரசுடைமையாக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையின் கீழ் வந்த பிறகு திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் வனப்பகுதியில் வசித்து வந்த இந்த தேவாங்குகள் கடவூர் மலைக்கு இடம்பெயர்ந்து, அவை வாழ்வதற்கு உகந்த இடமாக மாறி இப்போது உலகிலேயே அவை அதிக அளவில் வாழும் இடமாக அறிவிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியதாகும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடவூர் மலையை சரணாலயமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
தொகுப்பு: முனைவர்.மு.சந்தோஃச் குமார்.