
எறும்புண்ணி அல்லது அழுங்கு, அலங்கு (Pangolin) என்பது பாலூட்டி இனத்தை சேர்ந்தது. இவைகள் புற்றுகளிலுள்ள எறும்புகளையும், கறையான்களையும், ஈசல்களையும் மட்டுமே உண்பதால் இதற்கு எறும்பு தின்னி என்று பெயராயிற்று.
இது இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் சமவெளிகள், மலைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது.
இது பூனை அளவு கொண்டதாகவும், ஆனால் சற்றே நீளமான உடலும், நீண்ட வாலும், கூர்மையான முகம் கொண்ட, கூரிய நுண்ணறிவுள்ள விலங்கு ஆகும்.
மற்ற பாலூட்டிகள் போலல்லாமல் இதன் உடல் முழுக்க உள்ள செதில்கள் இதற்கு பாதுகாப்பு கவசமாகப் பயன்படுகிறது. உடலில் உள்ள முடிகளே காலப்போக்கில் செதில்களாக மாறிவிட்டன. பிற விலங்குகளிடமிருந்து தன்னை தற்பாதுகாக்க ஒரு இரும்பு குண்டு போல தன்னை சுருட்டிக்கொள்ள இதனால் முடியும்.
இதற்கு நல்ல உடல் வலு இருப்பதால் சுருட்டிக்கொண்ட உடலை இயல்பான நிலைக்கு விரிப்பது நம்மால் இயலாத செயல்.இதன் செதில்கள் நிறம் இதன் வாழும் சூழலில் பூமியின் நிறம் பொறுத்து மாறுபடுகிறது.இது பகலில் நிலத்தடி வனப்பகுகளிலும் பாறை இடுக்குகளிலும், மரபொந்துகளிலும் சுருண்டு உறங்கும். இருட்டியபின் இரை தேடக் கிளம்பும். எறும்பு, கரையான், ஈசல் போன்றவற்றை மட்டுமே உணவாகக் கொண்டு உயிர் வாழக்கூடியது.
இதன் முன்னங்கால்களைவிட நீளமான மழுங்கிய நகங்களால் எறும்புகளையும், செதில்களையும் தோண்டி எடுத்தும், மரங்களில் ஏறி மர எறும்புகளை பிடித்து உண்ணவல்லது. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. பசை கொண்ட நீண்ட, உருண்டையான நாக்கைப் புற்றின் உள்ளே விட்டு எறும்பு, கரையான் இவற்றைப் பிடிக்கும்.
அலங்கு ஒரே ஒரு குட்டியை ஈனும். அதன் குட்டி, கரடிக்குட்டி போலவே தாயின் முதுகில் சவாரி செய்யும். இதன் இறைச்சிக்காகவும், இதன் உடல் பாகங்கள் மருத்துவகுணமுடையவை என்ற நம்பிக்கை காரணமாகவும், இவை வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்திய எறும்புத்திண்ணி, இறைச்சி மற்றும் செதில்களுக்காக வேட்டையாடப்படுவதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இவை உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்பட்டு நுகரப்படுகின்றன. ஆனால் பன்னாட்டு அளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
எறும்புத்திண்ணியின் பல்வேறு பகுதிகள் உணவு மற்றும் மருந்தின் ஆதாரங்களாக மதிப்பிடப்படுகின்றன. செதில்கள் பாலுணர்வு தூண்டலாகவோ அல்லது மோதிரங்கள் அல்லது அழகு பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தோல்கள், மற்றும் காலணிகள் உட்பட தோல் பொருட்களை உற்பத்தி செய்ய இதன் தோல் பயன்படுத்தப்படுகின்றன பெரும்பாலான நாடோடிகள் மற்றும் பயிற்சி பெற்ற உள்ளூர் வேட்டைக்காரர்களால் வேட்டை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய எறும்புத்திண்ணியின் உடல் பாகங்கள் குறைந்தபட்சம் 2000களின் முற்பகுதியில் இருந்து சீனாவில் நுகர்வுக்காக கடத்தப்பட்டன. பாதுகாக்கப்பட்ட பாலூட்டிகளில் அதிகமாக கடத்தபப்டுவது எறும்புத்திண்ணி ஆகும். காடழிப்பு போன்ற அச்சுறுத்தலால் வாழ்விட இழப்பும் அடங்கும்.
ஒரு நாளைக்கு 20 ஆயிரம் எறும்புகளை தின்னும்.மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு உயிரினம்.பல்லுயிர் சமநிலையில் ஒரு முக்கியமான உயிரினம்.
இந்தியாவில் உடுமலைப்பேட்டை பகுதியில் , எறும்புத்தின்னிக்கு ஒரு சரணாலயம் அமைய வேண்டும்.
அனைவரும் குரல் கொடுப்போம்.
இப்புவியில் மனிதன் வாழ எவ்வளவு தகுதி உள்ளதோ சமபங்கு தகுதி சக உயிர்களுக்கும் உள்ளது… பல்லுயிர் சூழலில் எந்த ஒரு உயிரினம் முழுவதுமாக அழிந்தாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இயற்கை மற்றும் அதனுள் இருக்கும் மனிதர்களும் பாதிக்கப்படலாம். ஆதலால் சக உயிரினங்களின் வாழ்வாதாரத்தை பேணிக்காக்க அனைவரும் முன்வரவேண்டும்.
கடந்த ஆண்டு சக உயிரினமான தேவாங்கு-க்காக குரல் கொடுத்து அதற்கான சரணாலயம் அமைய பெற்றோம். அது போல எறும்புதிண்ணிக்கும் அமைய கோரிக்கை முன்வைப்போம்.
என் அன்பு எறும்புதிண்ணியே இனி உமக்கு நல்ல காலம் வாய்கட்டும்.
தொகுப்பு:முனைவர்.மு.சந்தோஃச் குமார்