“நீலகிரி சோலைக்காடுகளின் சொத்தாகக் கருதப்படும் பல உயிரினங்களில் நீலகிரி கருமந்தியும் ஒன்று. சமூகமாக வாழும் இந்த கருமந்திகள் வன வளத்தின் குறியீடு. ஈரப்பதம் நிறைந்த, மரங்களடர்ந்த மழைக்காடுகளில் வாழும் கருமந்திகள், நீலகிரியில் அவலாஞ்சி, அப்பர்பவானி, பைகாரா, போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. கருமந்திகளை பாதுகாப்பதன் மூலம் சோலைக்காடுகள் பாதுகாக்கப்படும். அதன் மூலம் நீராதாரங்கள் பாதுகாக்கப்படும். இதனால் ஆண்டு முழுவதும் மனிதர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்கவும் கருமந்திகள் மறைமுகமாக வழி செய்கின்றன. எனவே, இவற்றை இதன் வாழ்விடங்களில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்”.
காட்டுயிர்களின் சொர்க்கம்’ என அழைக்கக்கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை தன்னுள் பல அதிசயங்களைக் கொண்டுள்ளது. பல லட்சம் ஆண்டு பரிணாமத்தில் உருவான இந்தக் காடுகளில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நிலையில் காடழிப்பு, அதிகரிக்கும் பணப்பயிர்கள் பரப்பளவு, கட்டட மயம், வளர்ச்சிப் பணிகள் எனப் பல்வேறு காரணங்களால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மழைக் காடுகள் பெருமளவு சூறையாடப்படுகின்றன. அதனால் காட்டுயிர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஓரிட வாழ்விகள் அதிகம் காணப்படும் பகுதியாக இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறப்பம்சங்களில் ஒன்று. அதிலும் குறிப்பாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் ஓரிட வாழ்விகள் அதிகம் காணப்படுகின்றன. நீலகிரி வரையாடு, நீலகிரி பாடும் பறவை, நீலகிரி கருமந்தி போன்றவை உலகில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்கள். `சூழலியல் மாற்றத்தால் காட்டுயிர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டு வருகின்றன’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நீலகிரி கருமந்தி (Nilgiri langur) எனப்படும் சோலை மந்திகள், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் உள்ள மழைக்காடுகளில் காணப்படுகின்றன. அடர் கருமை நிறத்தில் உடலும், தலையில் குல்லா வைத்தது போலச் சாம்பல் நிறத்தில் ரோமங்கள் காணப்படும்.
தலையும் உடலும் சேர்ந்த நீளமானது முதிர்வடைந்த ஆண்களில் 78 முதல் 80 செ. மீ. வரையும், பெண்களில் 58- முதல் 60 செ. மீ. நீளமுடையது. வாலானது முறையே 68.5 மற்றும் 96.5 செ.மீ. நீளமுடையது. ஆண்களின் எடை 9.1 முதல் 14.8 கிலோ வரையும் பெண் எடையானது 10.9 முதல் 12 கிலோ வரையுள்ளது.
கர்ப்ப காலம் துல்லியமாக அறியப்படாத போதிலும், அனுமன் மந்திக்கு ஒத்ததாக அதாவது 200 நாட்கள் எனக் கருதப்படுகிறது. மற்ற மந்தி இனங்களைப் போல பகலாடியாகவும் கூட்டமாகவும் வாழும் இயல்பை கொண்டு இருந்தாலும் மர உச்சிகளில் மட்டுமே வாழும்.
பரிணாம வளர்ச்சியில் மழைக்காட்டில் வாழும்படியான தகவமைப்புடன் உருவாகியுள்ள உயிரி சோலைமந்தி. மரங்களின் உயரத்தில் இது இரை தேடும். வெகு அரிதாகவே தரைக்கு வரும். தோட்ட பயிர்களுக்காகவும், மரங்களை வெட்டியதாலும், அணைகள் கட்டியதாலும் இவற்றின் வாழிடமான மழைக்காடுகள் பெரும் அளவில் அழிக்கப்பட்டுவிட்டன.
உறைவிடம் போனதல்லாமல், நாட்டு வைத்தியத்துக்காகவும், மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும், பாலுணர்வைத் தூண்டும் மருந்து என்ற நம்பிக்கையில் சோலைமந்திகள் கொல்லப்பட்டன. மந்தி இறைச்சியில் எந்த மருத்துவ குணமும் கிடையாது. பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது என்ற மூடநம்பிக்கையில் மந்திகள் வேட்டையாடப்படுகின்றன. இதுவே கருமந்தி இனம் அழியக் காரணமாக இருக்கிறது. இன்று ஆனைமலை, களக்காடு சரணாலயங்களில் சிறு, சிறு தீவுகள் போல் எஞ்சியுள்ள வாழிடங்களில், சோலைமந்திகள் அழிவின் விளிம்பில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பிழைத்திருக்கின்றன. இதனால் ஒரே கூட்டத்தில் உள்ள உடன்பிறப்புகளுடன் உடலுறவு கொண்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.
1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இவை சேர்க்கப்பட்டன. தற்போது இது வேட்டையாடுவதிலிருந்தும் சட்டவிரோதமாக கடத்தப்படுவதையும் தடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. எனவே இவற்றின் வாழிடங்களை கண்டறிந்து தனிப்பட்ட முறையில் கருமந்திகளுக்கான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் அவற்றின் எண்ணிக்கை பாலின விகிதம் போன்றவற்றையும் கணக்கெடுப்பு செய்வது அவசியம்.
நீலகிரி கருமந்திகளை பாதுகாப்பது நமது பொறுப்பு அதன் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதும் நம் அனைவரின் கடமை.

காடுகளில் இருந்து ஒரு உயிரினம் அழிவை நோக்கி செல்கிறது என்றால் அந்த காடும் அழிவை நோக்கி செல்கிறதாகவே அர்த்தம். காடு காக்க வேண்டுமானால் அதில் இருக்கும் உயிரினத்தையும் காத்து பாதுகாக்க வேண்டும்.கருமந்திகளை காக்க அதன் இருப்பிட வனச்சூழலை பாதுக்காக்க நீலகிரி பகுதி குந்தா மலைத்தொடரில் அதற்கான சரணாலயம் அமைத்து அதன் வாழ்வியலை உறுதிசெய்ய கருமந்திக்கு உறுதுணையாக இருப்போம்.
தொகுப்பு:
முனைவர். மு.சந்தோஃச் குமார்.